பதிவு செய்த நாள்
25
நவ
2024
10:11
சென்னை; மதுரையை பூர்வீகமாகக் கொண்ட தியா சென்னையில் 3ம் வகுப்பு படிக்கிறார். 7 வயதே ஆகும் தியா, மேடையில் பாடும் போது கேட்டால் நம் மனம் பக்தி பரவசமாகும். ஆன்மிகம் கலந்த கணீர் குரல், மழலை முகபாவங்கள், உடல் மொழி அனைத்தும் காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் அதிசயமாக இருக்கும். திருப்புகழ் தியா, குட்டி கே.பி.சுந்தராம்பாள் என்றும் அன்பாக அழைக்கப்படுகிறார். தியாவின் முதல் மேடை 5 வயதில் ஆரம்பித்தது. தீவிர முருக பக்தையான இவர் முதல் கச்சேரியே முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று தொடங்கியிருக்கிறது. திருப்புகழ், அறுபடைவீடு முருகன் பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, தேவாரம், திருவாசகம் என்று மனம் விரும்பி பாடி பல்வேறு கோயில்களில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.
சென்னையில் வடபழனி முருகன் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்பட இவரின் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதுவரை 60 க்கும் மேற்பட்ட மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பழனி மாநாட்டில் பாடி புகழ் பெற்ற 7 வயது குழந்தை தியாவிற்கு, 23ம் தேதி இங்கிலாந்து, குளோபல் புக் ஆஃப் எக்ஸலன்ஸ் வழங்கும் கௌரவ விருது வழங்கப்பட்டது. இது சென்னையில் லிடியன் நாதஸ்வரம் ஸ்டுடியோவில் வழங்கப்பட்டது. இதுவரை 65 மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் செய்து உள்ளார். இசையில் அவரது பங்களிப்பை பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது.