பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
பழநி: பழநி கோயிலில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கடந்த 21-ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கி கார்த்திகை தீப திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. கார்த்திகையையொட்டி நேற்று மதியம் சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி, தீப ஸ்தம்பம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார்.மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு, உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கார்த்திகை தீப பூஜைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்க சிவாச்சாரியார் செய்தார். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்திருந்தார்.
பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து, டி.ஐ.ஜி., அறிவுசெல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.திண்டுக்கல்: அபிராமியம்மன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் வீதி உலா நடந்தது. கோட்டை மாரியம்மன் கோயில், வெள்ளை விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டது. கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், தோணிமலை முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது.விழாவை அடுத்து விளக்கு பூஜை, அபிஷேக ஆராதனைகளும், சுவாமி மலைக்கோயிலை மயில் வாகனத்தில் வலம் வந்தார். மாலை சொக்கப்பன் கொளுத்தப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.