பதிவு செய்த நாள்
26
நவ
2024
05:11
வாழ்க்கையில் எவ்வளவு தான் செல்வ செழிப்பு இருந்தாலும், மனதிற்கு நிம்மதி இல்லை என்றால் கஷ்டம் தான். மன நிம்மதியை தேடி கோவில்கள், அமைதியான இடங்களுக்கு செல்வோர் ஏராளம். கோவில்களுக்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் செல்வது ஆசிரமமாக இருக்கும். மனதிற்கு அமைதி தரும் ஆசிரமம் பற்றி பார்க்கலாம்.
20 ஏக்கர்; பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில், நெலமங்களா அருகே அரிஷினகுண்டே கிராமத்தில் உள்ளது விஸ்வ சாந்தி ஆசிரமம். கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் இந்த ஆசிரமத்தில், பல கோவில்கள், பூங்காக்கள் உள்ளன. ஆசிரமத்தின் நுழைவு வாயிலில் பெரிய விஜய விட்டல் சிலை உள்ளது. அஷ்டலட்சுமி கோவில், காயத்ரி மந்திர், பகவத் கீதை போதனை மற்றும் விஸ்வரூப சிலைகளுடன் கூடிய பிரமாண்ட தியான மண்டபமும் உள்ளது. இந்த ஆசிரமம், 1982ம் ஆண்டு சாந்த் கேசவ தாஸ் என்பவரால் நிறுவப்பட்டது. சட்ட பட்டதாரியான சாந்த் கேசவதாசின் வாழ்க்கை மிகவும் தேடலாகவே இருந்தது. அனைத்து மதங்களின் ஒற்றுமையிலும், அவர்கள் ஒரே இறுதி உண்மையைத்தான் தேடிப் போகின்றனர் என்று அவர் நம்பினார். இதனால் அனைத்து உலக மதங்களின் போதனைகளையும் ஒருங்கிணைத்து ஆசிரமத்தை நிறுவினார். உலகளாவிய மதம் பற்றிய செய்தியை பரப்புவதற்காக உலகம் முழுதும் பயணம் செய்தார். சாந்த் கேசவதாஸ் கடந்த 1997ல் மறைந்த பிறகு ஆன்மிக பணியை, அவரது மனைவி குரு மாதாஜி மேற்கொண்டு வருகிறார்.
கீதை மந்திர்; இந்த ஆசிரமத்தின் சிறப்பு அம்சமாக பகவத் கீதை மந்திர் உள்ளது. மந்திரின் வலது புறத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகியவற்றை குறிக்கும் சிலைகள் வரிசையாக உள்ளன. கோவிலின் முக்கிய ஈர்ப்பாக தேர் உள்ளது. அர்ஜுனன் பின்புறம் அமர்ந்திருக்க கிருஷ்ணர் குதிரைகளின் கடிவாளத்தை பிடித்து பகவத் கீதையின் உயரிய மற்றும் நடைமுறை தத்துவத்தை அவருக்கு கற்பிக்கிறார். தேரின் உள்ளேயும், வெளியேயும் கிரானைட் கற்களால் பகவத் கீதையின் 800 வசனங்கள் சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, கன்னட மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரமம் காஸ்மிக் மதத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. இந்த ஆசிரமத்திற்கு சென்று வந்த பக்தர்கள், ‘தங்களுக்கு மன அமைதி கிடைத்தது. இங்கு அனைவரும் கண்டிப்பாக சென்று வாருங்கள்’ என்று தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.