மண்ணில் புதைந்து கிடக்கும் பழங்கால கோயில் தூண்கள்; மீட்டு புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2024 05:11
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மண்ணில் புதைந்து கிடக்கும் பழங்கால கோயில் தூண்களை மீட்டு கோயிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குள்ள சிவபுரிபட்டி கிராமத்தில் பாலாற்றின் வடகரையில் 2000 ஆண்டுகள் பழமையான சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆற்றின் தென்கரையில் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பழங்கால கோயில் தூண்கள் மண்ணில் புதைந்து கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் காவிரி குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோன்றிய போது இத்தூண்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் பாண்டியர் காலத்து மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை ஒட்டிய பகுதியில் சீமைக் கருவேல மரங்களுக்கு இடையில் பல்வேறு சிற்பங்களும் மண்ணில் புதைந்து கிடக்கிறது. இந்த இடத்தில் ஏற்கனவே பழமையான கோயில் இருந்து அந்நியர் படையெடுப்பால் சேதப்படுத்தப்பட்டு இருக்கலாம். எனவே இந்த இடத்தில் அகழாய்வு செய்து அங்கு புதைந்திருக்கும் கல் தூண்களையும் சிற்பங்களையும் வெளியில் கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் கோயில் எழுப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.