திருக்கோஷ்டியூர் கோயில் குளத்திற்கு பாதுகாப்பு வேலி; பூஜையுடன் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2024 05:11
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் முன்பாக உள்ள குளத்தைச் சுற்றி கம்பியாலான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் முன்பாக உள்ளது திருப்பாற்கடல் எனப்படும் கோயில்குளம். இக்குளத்தை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டு துப்புரவு பணிகள் நடந்துள்ளது. தொடர்ந்து கோயில் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மேற்கு படித்துறை பகுதியை தவிர்த்து தெற்கு,வடக்கு,கிழக்கு ஆகிய 3 கரைகளில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கம்பியிலான தடுப்பு வேலி அமைக்க சமஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பணிகள் துவக்குவதற்கான பூஜைகளை திருப்பாற்கடலின் வட கிழக்கு பகுதியில் இன்று காலை பட்டாச்சார்யர்கள் நடத்தினர். தொடர்ந்து வேலி அமைக்கும் பணியும் துவங்கியது. கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் கூறுகையில்,‛ தெப்பக்குளத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பியாலான தடுப்பு வேலி அமைத்தது போல திருப்பாற்கடலிலும் அமைக்கப்பட உள்ளது. உபயதாரர்கள் நிதியுதவியுடன் 6.5 அடி உயரத்திலான கம்பி வேலி தடுப்புகள் 10 அடிக்கு ஒன்று வீதம் 125 தடுப்புகள் கரையைச் சுற்றிலும் நிறுவப்படும். நிதியுதவி அளிக்கும் உபயதாரர்கள் பெயர் வேலியில் பொருத்தப்படும்’ என்றார்.