பதிவு செய்த நாள்
27
நவ
2024
05:11
மீஞ்சூர்; வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த இரு கோவில்களிலும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் அடுத்தடுத்து பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெறும்.
பிரம்மோற்சவத்தின்போது, இருகோவில்களிலும் தேர் திருவீதி உலா விமரிசையாக நடபெறும். இவ்விரு கோவில்களுக்கும் ஒரே தேர் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்த பழமையான மரத்தேர் சிதிலம் அடைந்ததை தொடர்ந்து, கடந்த, 2016ல், ஒரு கோடி ரூபாய் செலவில், 45அடி உயரத்தில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு திருவிழாக்களின்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர் மழை, வெயிலில் பாதிப்படையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தின் சார்பில், இருபுறமும் இரும்பு ஷட்டர்களுடன் கூடிய தனி கட்டடம் அமைத்து தரப்பட்டது. மோட்டார் உதவியுடன் ஷட்டர்களை ஏற்றி இறக்கும் வகையில் இது அமைந்தது. பிரம்மோற்வத்தின்போது, கட்டடத்தில் இருந்து வெளியில் கொண்டு வரப்படும். திருவிழா முடிந்தவுடன், நிலையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஷட்டர் கீழிறிக்கி பூட்டப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட தேர் கட்டடத்தில் உள்ள இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்தது. அதை சரிசெய்வதில் கோவில் நிர்வாகங்கள் அலட்சியம் காட்டி வருகின்றன. இதனால் மழை, வெயிலில் தேர் பாழாகி வருகிறது. மேலும், சமூக விரோதிகள், தேர் கட்டடத்தின் உள்ளே அமர்ந்து மது அருந்துவது, புகைப்பது என இருக்கின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில், தேரின் மீது மழைநீர் பட்டு அதில் உள்ள வர்ணங்கள் மங்கி வருவதுடன், உறுதி தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தேர் முழுமையாக பாதிப்படையும் முன், உடனடியாக இரும்பு ஷட்டர்களின் பழுதுகளை நீக்கி, அவ்வப்போது பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.