பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினர். சுவாமி சன்னதி பஜாரில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து அம்மன் சன்னதி பஜாரில் அமைக்கப்பட்டிருந்த தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொழுந்து விட்டு எரிந்த போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் ரதவீதிகளில் உலா வந்த சுவாமி, அம்பாள் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு, சொக்கப்பனை தீபம் ஏற்றல் நடந்தது. தென்பழனியாண்டவர் கோயிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குலசேகரநாதர் கோயில், புலிக்குட்டி விநாயகர் கோயில், அணைக்கரை விநாயகர் கோயில், கூளக்கடைபஜார் சந்தி விநாயகர் கோயில், மேலகரம் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், இலஞ்சி குமாரர் கோயில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமிகோயில், புளியரை தட்சிணாமூர்த்தி கோயில், செங்கோட்டை சிவன் கோயிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இலத்தூர், பெரியபிள்ளைவலசை, சீவநல்லூர், கணக்கப்பிள்ளைவலசை, அச்சன்புதூர், வடகரை, குத்துக்கல்வலசை, ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, பாட்டாக்குறிச்சி, மத்தளம்பாறை, வல்லம், காசிமேஜர்புரம், கொட்டாகுளம், விசுவநாதபுரம், தேன்பொத்தை, தெற்குமேடு, புதூர், பகவதிபுரம், சிவராமபேட்டை, இடைகால் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் அகல் விளக்கு ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடினர்.