பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
திருச்சி: திருக்கார்த்திகையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில், தொடர்ந்து, 3 நாட்கள் வரை எரியும் மஹா தீபம் ஏற்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலில், திருக்கார்த்திகை தினமான நேற்று, மட்டுவார் குழலம்மை, தாயுமானவர், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய, பஞ்ச மூர்த்திகளின் உற்சவ விக்கிரங்களுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை, 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகளும் புறப்பட்டு, மலை உச்சியை வந்தடைந்தனர். மலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் முன் இளம்விளக்கு எனப்படும் சிறிய விளக்கு ஏற்பட்டது. பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், மாலை, 6 மணிக்கு வாண வேடிக்கை முழங்க, இளம் விளக்கில் இருந்து பெறப்பட்ட ஜோதியின் மூலம் மஹா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், பஞ்ச மூர்த்திகளும், மேள, தாளங்களுடன் திருவீதியுலா வந்தனர்.
ஸ்ரீரங்கம்: மலைக்கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீபம் கொளுத்தப்பட்ட நிலையில், தரைக்கோவில்களில் இன்று சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடக்கிறது. பஞ்சபூத ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் உட்பட அனைத்து சிவ ஸ்தலங்கள், அம்மன் கோவில்களில் இன்று மாலை சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், முதல் புறப்பாடாக, நம்பெருமாள், இன்று காலை, 9 மணிக்கு மூலஸ்தானத்தில் புறப்பட்டு, சந்தன மண்டபம் செல்கிறார். 11 மணி முதல், மதியம், 1 மணி வரை, திருமஞ்சனம் கண்டருள்கிறார். மாலை, 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 2ம் புறப்பாடாக, சொக்கப்பனை கண்டருள, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் முன்னர், கோவில் தங்ககொடிமரம் அருகே, உத்தமநம்பி ஸ்வாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை, 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, கார்த்திகை கோபுரம் வந்தடைகிறார். சொக்கப்பனை பந்தலை வலம் வந்து, சக்கரதாழ்வார் சன்னதி எதிரே நம்பெருமாள் காத்திருக்க, இரவு, 8.45 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருஷ்டி கழிக்கும் பெருமாள்: அதைத்தொடர்ந்து நந்தவனம் வழியே தாயார் சன்னதிக்கு செல்லும் நம்பெருமாளுக்கு, "திருவந்தி காப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9.15 மணிக்கு, சந்தன மண்டபம் செல்லும் நம்பெருமாள் முன், 9.45 மணிக்கு, "திருமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து படிக்கப்படுகிறது. இரவு, 10.15 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர்கள் ரங்காச்சாரி, சீனிவாசன், கஸ்தூரி, பரம்பரை சுழல்முறை அறங்காவலர் பராசர பட்டர் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.
மெகா தீபம்! மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக, உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே, 50 அடி உயரத்தில் இரும்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள ராட்ஷத செப்புக் கொப்பரையில், 1,000 லிட்டர் எண்ணை, 6,000 மீட்டர் நீள திரி, 800 கிலோ எடையுடைய பருத்தித்துணி கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெளிவாக தெரியும் மஹா தீபம், 3 நாட்கள் வரை தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.