பதிவு செய்த நாள்
02
டிச
2024
10:12
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கார்த்திகை மாத மூன்றாவது வார கடை ஞாயிறு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, திரளான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கொட்டும் மழையிலும் கோவிலில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள குளக்கரையில், தீயணைப்பு துறையினர் மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.