பதிவு செய்த நாள்
05
டிச
2024
03:12
தஞ்சாவூர், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகத்தின் தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறனுக்கு, திருவாரூர் மாவட்டம் காரியமங்கலம் பகுதியை சேர்ந்த சாருலதா என்பவர் சிதைந்த நிலையில் சிலைகள், சிற்பங்கள் உள்ளதாக தகவல் அளித்தார். அதன்பேரில், மணிமாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லைகோவிந்தராஜன், சக்கராப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து மணி.மாறன் கூறியதாவது: கோரையாற்றின் கிளை ஆறான அரிச்சந்திரா நதியின் வடகரையில், விக்கிரபாண்டியம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரை சோழ, பாண்டிய, நாயக்கர், மராத்திய மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக திகழ்ந்துள்ளது. சோழர் மன்னருக்கு பிறகு, பாண்டிய மன்னர்களின் ஒருவரான வீரபாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியனின் பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவ்வூரில், முற்றிலும் சிதைந்து போன நிலையில் இருந்த சிவாலயம் உள்ள இடத்தில், புதிய கோவில் அமைப்பதற்காக குழிதோண்டிய போது, சோழர்கள் கால உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நமது ஆய்வில், அங்கு காணப்பட்ட சிற்பங்கள், சிலைகளை ஆய்வு செய்தோம். அதில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த நின்ற கோலத்தில் மிக அழகான முருகன் சிற்பம் ஒன்றும், கோவில் கோஷ்ட மாடப்பகுதியில் அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் இருபுறமும் காணப்படும் சனகாதி முனிவர்களின் சிற்பங்களை அடையாளம் மூலம் கண்டுபிடித்தோம். அத்துடன், முற்கால சோழகர்கள் கோவில் கோபுர கலசக்கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கோவிலுக்கு எதிரே வயல்வெளியில் சோழர் காலத்தைச் சார்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளின் சிறு சிறு உடைந்த துண்டுகளையும் காணமுடிகிறது இவ்வாறு அவர் கூறினார்.