திருவண்ணாமலை மஹாதீபம் தரிசன சீட்டு நாளை ஆன்லைனில் விற்பனை
பதிவு செய்த நாள்
10
டிச 2024 11:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் மற்றும் பரணி தீப தரிசன சீட்டுகள் நாளை, 11ல் காலை ஆன்லைன் மூலம் விற்பனை தொடங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 13ல் காலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பஞ்ச மூர்த்திகள், அர்த்தநாரீஸ்வரர் நடனம், மஹா தீப தரிசனத்தை கோவிலினுள் சென்றால் மட்டுமே காண முடியும். இதற்காக, கோவிலினுள் செல்ல ஏராளமானோர் ஆர்வம் செலுத்துவர். ஆனால், கோவிலினுள், 11,500 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவில் இடம் உள்ளதால், இந்த அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில், உபயதாரர், கட்டளைதாரர், பாதுகாப்பு பணிக்கு போலீசார், அலுவலக பணியாளர்கள், சுவாமி துாக்குபவர்கள், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இதில் அடங்குவர். இந்நிலையில், பரணி தீப, 500 ரூபாய் கட்டண டிக்கெட், 500ம்-, மஹா தீபம், 600 ரூபாய் கட்டண டிக்கெட், 100ம், மற்றும் 500 ரூபாய் கட்டண டிக்கெட், 1,000 மட்டும், நாளை காலை, 10:00 மணி முதல், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற ஆன்லைன் முகவரி மூலம், விற்பனை தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் பெற ஆதார் அட்டை, மொபைல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு, ஒரு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். டிக்கெட் பதிவிற்கு பயன்படுத்தப்படும், அதே மின்னஞ்சல் வழியாக, கட்டண சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 4,500 கிலோ நெய், ஆவின் நிர்வாகத்திடமிருந்து கொள்முதல் செய்து கோவிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், கோவில் அலுவலகத்தில், நெய்யாகவோ, பணமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
|