பொன்னேரி; பொன்னேரி அடுத்த, சிங்கிலிமேடு கிராமத்தில், ஸ்ரீனிவாச பெருமாள், தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன.
இக்கோவில்கள், 400 ஆண்டுகள் பழமையானவை. கிராம மக்களின் சொந்த முயற்சியில், திருப்பணிகள் மேற்கொண்டு, கடந்த செப்டம்பர் மாதம், கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து, இக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று, கார்த்திகை திங்களை முன்னிட்டு, வைத்தீஸ்வர பெருமானுக்கு, பால்குடம் மற்றும் ருத்திராட்ச அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பெருமாள் கோவிலில் இருந்து, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடங்களை தலையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். பனியாத்தம்மன் கோவிலை வலம் வந்து, பின் வைத்திஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் ஏந்தி வந்த பால்குடங்களால் தையல்நாயகி மற்றும் வைத்தீஸ்வர பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, ருத்ராட்சங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் விமரிசையாக நடந்தன.