பதிவு செய்த நாள்
11
டிச
2024
10:12
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து பெருமாள் கண் விழிக்கிறார். இன்றைய தினம் உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். பழம், பால், பயத்தம் கஞ்சி சாப்பிட்டு பகவானை பிரார்த்திக்க நல்ல பயன் பெறலாம். இன்று துளசியை வணங்குபவர்கள் பாவங்களில் இருந்து விடு படுவார்கள்.
மார்கழியில் வரும் ஏகாதசி திருநாள் வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. இதுபோல் கார்த்திகையில் வரும் ஏகாதசி கைசிக ஏகாதசி எனப்படுகிறது. திருக்குறுங்குடி என்னும் தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அழகிய நம்பிராயரை, முற்காலத்தில் நம்பாடுவான் என்பவர் பயபக்தியோடு வணங்கி வந்தார். ஒருநாள் ராட்சசு ஒன்று அவரை சாப்பிட நெருங்கியது. கோயில் சென்று பெருமாளை சேவித்தபின், மீண்டும் உன்னிடம் வந்துவிடுகிறேன். அதன்பின் என்னை உணவாக்கிக் கொள் என்றார் நம்பாடுவன். ராட்சசும் சம்மதித்தது. சொன்னதுபோலவே கோயிலுக்கு சென்று திரும்பிய நம்பாடுவான், ராட்சசு அருகில் வந்தார். தன்னை சாப்பிடுமாறு வேண்டினார். அவரது நேர்மையாலும், பக்தியாலும் ராட்சசு சாப விமோசனம் பெற்று, மனிதனானது. இந்த வரலாற்றை நினைவு கூர்வதே கைசிக ஏகாதசி திருநாள். இவ்விழா திருக்குறுங்குடி, நான்குநேரி, ஸ்ரீரங்கம் போன்ற குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அன்று இரவில் சிலர் நம்பாடுவான் போன்றும், ராட்சசு போன்றும் வேடமணிந்து, கைசிக புராணத்தை நடித்துக் காண்பிப்பார்கள்.