பதிவு செய்த நாள்
12
டிச
2024
10:12
ஆனைமலை; பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜ கோபுரம் பாலாலயம் நடந்தது. தொடர்ந்து, கடந்த, 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. 9ம் தேதி யாக பூஜைகள் துவங்கின. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதி, மாலை, 4:00 மணிக்கு வேதபாராயணம், மாலை, 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. இன்று காலை, 7:35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, காலை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, காலை, 9:15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. காலை, 9:30 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை, 5:00 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, மாலை, 6:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.