8+12+6=26. ஒன்றாம் வகுப்பு குழந்தைக்குரியது போல இருக்கும் இந்தக் கணக்கை பெரிய கணக்கு என்கிறீர்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையில் இது பெரிய கணக்கு தான். ஏனெனில், இது பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனுக்குரிய கணக்கு. விஷ்ணு காயத்ரியில் நாராயண மந்திரம், வாசுதேவ மந்திரம், விஷ்ணு மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்கள் உள்ளன. இதில் நாராயண மந்திரம் என்பது ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து). வாசுதேவ மந்திரத்தில் 12 எழுத்துக்கள் உள்ளன. ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது அந்த மந்திரம். விஷ்ணு மந்திரம் என்பது ஓம் விஷ்ணவே நம (நம என்பது ஓரெழுத்து) என்ற ஆறெழுத்து உடையது. ஆக, இவற்றின் கூட்டுத்தொகை 26. விஷ்ணு காயத்ரியில் இவை எல்லாவற்றையும் சேர்த்து 26 எழுத்துக்கள் உள்ளன. நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் என்பது இந்த மந்திரம். (சமஸ்கிருதத்தில் எழுத்துக்களை தனித்தனியாக எண்ணக்கூடாது. சில சேர்ந்து வரும்). சக்தி வாய்ந்த இந்த மந்திரங்களை ஜெபித்தால் விஷ்ணு அருள் கிடைக்கும்.