பதிவு செய்த நாள்
12
டிச
2024
12:12
கொங்குநாட்டு மக்களின் காவல் தெய்வமாக விளங்கும், ஆனைமலை மாசாணியம்மன் உப்பாற்றங்கரையில், சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனைமலை சோமேஸ்வரர் கோவில் அருகே, மயான பூஜைக்காக ஏற்பாடுகள் செய்யப்படும். அம்மன் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். அருளாளி, ஆற்றில் நீராடி தீர்த்தம் எடுத்து வருவார்.பம்பை, மேள தாளங்கள் முழங்க அம்மன் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். எலுமிச்சை பழத்தால், அம்மன் பீடம் அலங்கரிக்கப்படும். பம்பைக்காரர்கள், பக்தி பாடல் பாடுவர். எலும்புத்துண்டை வாயில் கவ்விக்கொண்டு, கையில் சூலாயுதத்துடன் அருளாளி ஆவேசமாக நடனமாட, மாசாணி தாயே, பராசக்தி தாயே என, பக்தர்கள் பக்தி பரவசத்தில் குலவை எழுப்புவர். இதை காணும் பக்தர்களுக்கும் அருள் வந்து ஆடுவர். அம்மன் சிலையில் இருந்து, ஒரு பிடி மண் எடுக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். மறுநாள் காலை, 6:30க்கு ஆழியாறு ஆற்றுப்படுகையில் கும்பஸ்தாபனம் நடக்கும். இதில், அம்மன் உருவத்தில் எடுத்த பிடிமண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்படும். இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் வந்து இரவு முழுவதும் கண்விழித்து வழிபடுவர்.