பதிவு செய்த நாள்
12
டிச
2024
12:12
ஆனைமலை உப்பாற்றாங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். மாசாணியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்கிறார். குண்டம் திருவிழாவின் கடைசி நிகழ்வாக, மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதில், அருள் வந்த நிலையில் மகாமுனி அருளாளியை, மேள-தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர், அம்மன் அருளாளிகள், முறைதாரர்கள் அழைத்து வருவர்.
அருள் வந்த நிலையில் ஆவேசமாக இருக்கும் அருளாளியை, சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வருவர். இரவு மகாமுனிக்கு புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படும். இதையடுத்து மகாமுனி அருளாளி அருள் வந்து படையல்களை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி வலம் வருவார். மகாமுனியின் படையல் பிரசாதம் கிடைத்தால் குழந்தை வரம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பல பெண்கள், தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மகாமுனியின் படையல் பிரசாதத்துக்கு காத்திருப்பர். மகாமுனியின் படையல் பிரசாதம் கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தபடியே மகாமுனியை வணங்குவர்.மகாமுனி பூஜையை காண கோவிலில் அதிகளவு பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருப்பர். பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.