பதிவு செய்த நாள்
13
டிச
2024
02:12
காரமடை; வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் திருமங்கையாழ்வார் வரது திருநட்சத்திரமான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் வைணவ திருத்தலங்களில் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கொங்கு நாட்டில் சிறப்பு பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை முடிந்து திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்தி ராமானுஜர் சன்னதியில் எழந்தருளினார். அங்கு விஸ்வக்ஷேனர் ஆவாகனம், லட்சுமி நாராயண ஆவாகனம், புண்யா வசனம், கலச ஆவாகனம், மூலவர் ராமானுஜர் மற்றும் திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்திக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் பால் தயிர், தேன், நெய், இளநீர்,சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, ரங்க மண்டபத்திலே ஸ்ரீரங்கநாதர் முன் திருமங்கையாழ்வார் எழுந்தருளினார். ரங்கநாதரிடம் இருந்து சந்தன மாலை, பரிவட்ட மரியாதை நடந்தது. பின்னர் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் மற்றும் திருமலை நல்லா சக்கரவர்த்தி ஸ்தலத்தார்கள் தமிழ் வேதமாகிய திவ்யபிரபந்தத்திலிருந்து திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி பாசுரங்களை சேவித்தனர். பின்னர் ரங்கநாதரிடம் இருந்து சடானரி மரியாதை அளிக்கப்பட்டு திருக்கோவில் வலம் வந்து மீண்டும் ராமானுஜர் சன்னதியை அடைந்தார். பின்னர் உச்சகால பூஜை சற்று முறை சேவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தகள் கலந்து கொண்டனர்.