கேரள மாநிலம், பாலக்காடு கொடும்பு அருகே, பிரசித்தி பெற்ற திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, திருகார்த்திகை உற்சவம் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம், கடந்த டிச. 5ம் தேதி பிரஹ்மஸ்ரீ அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடின் தலைமையில் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில், உற்சவத்தின் சிறப்பு நாளான நேற்று பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 6:15 மணிக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்று விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில், பகவதி அம்மன் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று, (14ம் தேதி) உச்ச பூஜை, ஸ்ரீபூதபலி, தீபாராதனை, தேசவிளக்கு, நிறமாலை ஆகிய நிகழ்வுகள் நடக்கிறது.