தொடர் மழை, திருப்புவனம் திதி பொட்டலில் தவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 08:12
திருப்புவனம்; திருப்புவனம் திதி பொட்டலில் மேற்கூரை இல்லாததால் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கினர். காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் ஆகும், எனவே தென்மாவட்ட பக்தர்கள் பலரும் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க திருப்புவனம் வந்து செல்கின்றனர். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்க வந்து செல்கின்றனர். திதி, தர்ப்பணம் வழங்கும் பக்தர்களிடம் சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் திருப்புவனம் பேரூராட்சி சார்பில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளிக்கவும், கழிப்பறை வசதிகளும் மட்டும் செய்து தரப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் வைகை ஆற்றங்கரையில் குப்பைகளுக்கு மத்தியில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழை காரணமாக திதி பொட்டல் சேறும் சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே முன்னேர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி செல்கின்றனர். வைகை ஆற்றங்கரையில் போதிய இட வசதி உள்ள நிலையில் ஆக்ரமிப்புகளை அகற்றி திருப்புவனம் பேரூராட்சி சார்பில் மேற்கூரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இதன் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். பல முறை பக்தர்கள் சார்பில் மேற்கூரை அமைக்க வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வேதனையுடன் வந்து செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் திதி பொட்டலில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.