குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2024 10:12
மயிலாடுதுறை; குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் இன்று நடந்த கடை ஞாயிறு தீர்த்தவாரியில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொண்டு காவிரியில் நீராடினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் இந்த ஆண்டு கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி இன்று மதியம் நடந்தது. தீர்த்தவாரியை முன்னிட்டு உக்தவேதீஸ்வரர், ஓம் காளீஸ்வரர், மன்மதீஸ்வரர், சோழீஸ்வரர் கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருள தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அஸ்திர தேவர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். தொடர்ந்து 4 கோவில்களில் இருந்து காவிரியில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குத்தாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.