உறிகட்டி சுவாமிகள் குருபூஜை; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2024 10:12
மயிலாடுதுறை; சேத்திரபாலபுரத்தில் மக்களின் பசி மற்றும் நோய் தீர்த்து குழந்தை பாக்கியம் அருளும் உறிகட்டி சுவாமிகளின் குருபூஜை இன்று நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரத்தில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மகான் உறிகட்டி சுவாமிகள் மக்களின் பசி மற்றும் நோயைப் போக்கியதுடன், மருத்துவம் மூலம் குழந்தை பாக்கியம் அருளியுள்ளார். அவரை இப்பகுதி மக்கள் மகானாக போற்றி வணங்கியுள்ளனர். 1906 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சித்தி அடைந்தார். உறிகட்டி சுவாமிகளின் ஜீவசமாதி மாரியம்மன் கோவில் அருகில் உள்ளது. அங்கு சென்று வழிபடுபவர்களுக்கு வேண்டிய யாவும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவரது 118 வது குருபூஜை விழா இன்று அவரது ஜீவ சமாதியில் நடந்தது. குருபூஜையை முன்னிட்டு இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் கடத்தில் புனித நீர் வைத்து பூஜிக்க பட்டு உறிகட்டி சுவாமிகளின் ஜீவ சமாதியின் மீதுள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அடியார்கள் உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குழந்தை இல்லாத பெண்கள் அன்னதானத்தில் கலந்துகொண்ட சாதுக்களிடம் மடி பிச்சை எடுத்து அந்த உணவை அருந்தினர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். குருபூஜை ஏற்பாடுகளை கண்ணன், பூஜாரி வீரா ஜோதி ஆகியோர் தலைமையில் கிராமவாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.