பதிவு செய்த நாள்
15
டிச
2024
11:12
மேல்மருவத்துார்; செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழாவையொட்டி, சக்தி மாலை இருமுடி விழா ஆண்டுதோறும் நடக்கிறது. இதில் ஐந்து அல்லது மூன்று நாட்கள் சக்தி விரதம் இருந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சக்திமாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து, சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டு, தைப்பூச ஜோதி சக்தி மாலை இருமுடி விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் இயற்கை வழிபாடு நடந்தது.
சக்திமாலை இருமுடி அபிஷேகத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி செவிலியர் கல்லுாரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழா, 2025 பிப்ரவரி 10ம் தேதி வரை நடைபெறும். 11ம் தேதி, தைப்பூச ஜோதி விழா நடக்கிறது. செவ்வாடை பக்தர்களுக்கு, தகவல் மையம், முதலுதவி, சுகாதாரம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் ரயில்கள், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். வழக்கமாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லும். விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.