மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
மார்கழி அதிகாலையில் திருவெம்பாவை பாடினால் நமது ஆத்மா சுத்தமடைகிறது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் சிக்கியுள்ளது நமது ஆத்மா. இதனால் இருளில் கிடந்து உழல்கிறது. திருவெம்பாவை பாடுவதால், இறைவனின் திருவருளைப் பெற்று ஆத்மா பரிசுத்தம் அடைகிறது. ஆத்மசுத்தம் என்றால் மன சுத்தம். மனம் சுத்தமானால் வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. நீராட வா என்று அழைப்பது வெறுமனே குளத்தில் போய் குளிப்பதை மட்டும் குறிப்பதல்ல. மனதிலுள்ள மாசுகளைக் கழுவுவதையே நீராட்டம் என்ற வார்த்தையால் குறிக்கிறார் திருவெம்பாவை ஆசிரியர் மாணிக்கவாசகர்.