பதிவு செய்த நாள்
29
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், இன்று (நவ.,29) அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு தீபம் எரியும். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் தெப்ப திருவிழாவில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இன்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடக்கிறது. இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஸ்வாமிக்கு மண்டகப்படி செலுத்தி வழிபட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
11 நாள் ஜொலிக்கும் மஹா தீபம்: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம், 11 நாள் ஜொலிக்கும். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், 2, 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது, ஆறடி உயரமுள்ள கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் வாங்கப்பட்ட, 3, 500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. அதோடு பக்தர்கள் வாங்கி சென்று காணிக்கையாக செலுத்தப்படும் நெய்யும் பயன்படுத்தப்படும். இந்த தீபம் மலை உச்சியில் வரும் டிசம்பர், 7ம் தேதி வரை, 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இந்தாண்டு பக்தர்கள் மஹா தீபத்தை தரிசனம் செய்ய அதிக அளவில் நேற்று முதல் மலை உச்சிக்கு சென்றனர். தொடர்ந்து வரும் நாட்களிலும், மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.