பதிவு செய்த நாள்
29
நவ
2012
11:11
காஞ்சிபுரம்: தொடர் மின்வெட்டு காரணமாக, கோவில்களில் ஜெனரேட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்கள் என, 1,384 கோவில்கள் உள்ளன. இவற்றில், அதிக வருமானம் உள்ள கோவில்கள், குறைந்த வருவாய் உள்ள கோவில்கள் என, இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஒரு கால பூஜைகள் கோவில்களும் அடங்கும். மின்வெட்டு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில், தினமும் காலை 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் மின் தடை ஏற்படும் என, மின்வாரியம் அறிவித்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. அதன் பின் ஒரு மணி நேரத்திற்கு, ஒரு முறை மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. தினமும், 16 மணி நேரத்திற்கும் குறையாமல், மின்தடை உள்ளது.
பூஜைகள்: வருவாய் அதிகமாக உள்ள கோவில்களில், ஐந்து கால பூஜையும், நடுத்தர வருவாய் உள்ள கோவில்களில் மூன்று கால பூஜையும், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் ஒரு கால பூஜையும் நடைபெற்று வருகிறது. கோவில் பூஜை நேரங்களில், குறைந்த பட்சம், 5 மணி முதல் 9 மணி நேரம் வரையில் மின் தடை ஏற்படுகிறது.
ஜெனரேட்டர்: பெரும்பாலான கோவில்களில், மின்தடை ஏற்படும் போது, கோவில்களின் உட்பிரகாரங்கள், இருளில் மூழ்கி விடுகின்றன. இதை சமாளிக்க, நன்கொடையாளர் மூலமாகவோ அல்லது துறை மூலமாகவோ, கோவில்களில் பொருத்தப்பட்டுள்ள ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ( மின்சாரம் சேமிப்பு கலம்) ஆகியவை உதவுகின்றன. தற்போது, 5 முதல் 8 மணி நேரத்திற்கு ஜெனரேட்டர்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது: மின்வெட்டு ஏற்படும் நேரங்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெனரேட்டர்களின் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வரையில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.