பதிவு செய்த நாள்
29
நவ
2012
10:11
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, மூன்று நாள் தடையில்லா மின்சாரம் வழங்குவது என்றும், வி.ஐ.பி., பாஸ் கிடையாது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, டிச., 13ம் தேதி, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. டிச., 14ல், பகல் பத்து துவங்கி, ஜன., 3ம் தேதி வரை, விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சொர்க்க வாசல் திறப்பு விழா, டிச., 24ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ, தலைமை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவது: இந்த முறை யாருக்கும், வி.ஐ.பி., பாஸ் வழங்கப்பட மாட்டாது. அதேசமயம், விழா பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, பாஸ் வழங்கப்படும். முக்கிய நாட்களாக, டிச., 23 முதல், 25 வரை, கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். பாதுகாப்பு பணியில், 3,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.