பதிவு செய்த நாள்
23
டிச
2024
02:12
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து, மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணிக்கும், ஆதியோகி ரத யாத்திரையை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதனையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரி விழாவிற்கு, பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள், அவர்களுடைய ஊரிலேயே ஆதியோகி தரிசனம் செய்வதற்காகவும், ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களை அழைக்கும் வகையில், ஆதியோகி திருமேனியுடன் கூடிய நான்கு ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளில் பயணிக்க உள்ளன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான, 2 மாதக்காலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார், 30,000 கிலோ மீட்டர் பயணிக்கு உள்ளது. இந்த ரத யாத்திரையின் துவக்க விழா, கோவை ஆதியோகி முன்பு நேற்று நடந்தது. இந்த விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், ஆரத்தி எடுத்து, ரத யாத்திரையை துவங்கி வைத்தனர். இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில்,"மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் வரும் மஹா சிவராத்திரியை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை மக்களின் விழாவாக, மக்களின் வழிபாட்டு நிகழ்வாக மாற்றிய பெருமை ஈஷா யோகா மையத்தையே சேரும். ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இவ்விழாவில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, ஆதியோகி ரதங்கள் இங்கிருந்து புறப்பட்டு கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் பயணிக்க உள்ளன. கோவில்களின் மூலவர் இருப்பதை போல், ஆதியோகி இங்கு இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த ரதங்களில் உள்ள ஆதியோகி திருமேனிகள், உற்சவ மூர்த்திகளை போல் ஊர்தோறும் பயணித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன் நல்லதொடக்க விழா தொடங்குகிறது. ஈஷா யோகா மையத்தின் பணிகள், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. ஈஷாவின் சமய பணிகளும், சமுதாய பணிகளும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,"என்றார்.