பதிவு செய்த நாள்
24
டிச
2024
03:12
கோவை; ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு (தெற்கு) சார்பில், கோவையில் மாநில அளவிலான, பாலவிகாஸ் மாணவர்களுக்கான திறன் தேடல் நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
கோவை, நவ இந்தியாவிலுள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கலையரங்கில், இன்று காலை ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவன கொடியேற்றம், அதன் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஸ்ரீசத்யசாய் எழுந்தருளுவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு, சாய் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். சாய் பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதை செய்து, நிகழ்ச்சி அரங்கிற்கு மங்களவாத்தியங்கள் முழங்க அழைத்துச்சென்றனர். அங்கு, ஸ்ரீ சத்யசாய் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள், சாய் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கோவை பால விகாஷ் குழந்தைகளின் வேதபாராயண முழக்கங்களும், சாய் பஜனையும், நாட்டிய நடனமும் நடந்தது. இதில் முக்கிய விருந்தினராக, அனந்த்பூரிலுள்ள ஸ்ரீ சத்யசாய் கல்லுாரி நிறுவனங்களின் முன்னாள் இயக்குனர் ராஜேஸ்வரி பட்டேல் பங்கேற்றார். பாலவிகாஷ் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பாலவிகாஷ் குருமார்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு (தெற்கு) சார்பில், நடந்த பாலவிகாஸ் மாணவர்களுக்கான திறன் தேடல் நிகழ்ச்சியில், 5 முதல், 13 வயதுள்ள 750 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். வினாடி வினா, நடனம், நாட்டியம், பல்வேறு திறன் போட்டிகள், வேதபாராயணம், ஓவியம், பக்தி பாடல், வேத மந்திர பாராயணம் நடத்தப்பட்டது. நாளையும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. வெற்றி பெற்ற குழந்தைகள், பரிசும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.