பதிவு செய்த நாள்
26
டிச
2024
10:12
நாமக்கல்; ஹனுமன் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி நேற்று முன் தினம் துவங்கியது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும், 30ல் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை, ஒரு லட்சத்து எட்டு வடைகளை மாலையாக கோர்த்து சுவாமிக்கு சாற்றி வழிபாடு நடத்தப்படும். இதற்காக, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று முன் தினம் துவங்கியது. இதற்காக, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 38 பேர் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஸ்ரீரங்கம் ரமேஷ் கூறியதாவது: ஹனுமன் ஜெயந்தி விழாவுக்காக ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்க, 2,500 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை சுத்தம் செய்து அரைத்து வடை செய்யும் பணி, இரவு, பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடக்கிறது. வரும் 29ம் தேதி மதியம் ஒரு லட்சத்து எட்டு வடை தயாரிக்கும் பணி முடிவடையும். அதைத் தொடந்து, கயிற்றில் மாலையாக கோர்த்து, அன்று இரவு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.