பதிவு செய்த நாள்
26
டிச
2024
10:12
திருப்பூர்; திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நடந்த மங்கள வேல் வழிபாடு அலகுமலையில் நேற்று நிறைவடைந்தது. மஹா யாகத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
திருப்பூர் அருகே அலகுமலையில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நடந்த மங்கள வேல் வழிபாடு மஹாயாகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில், கொங்கு மண்டலத்தின் ஏழு திருத்தலங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கள வேல், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் மக்கள் தரிசனத்துக்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இரு வாரங்களாக திருப்பூரில் மங்கள வேலுடன் கூடிய வாகனம் ஒவ்வொரு பகுதியாக வலம் வந்தது. பொதுமக்கள் வேலுக்கு பாலாபிஷேகம், மலர்களால் பூஜை செய்து வழிபட்டனர். நிறைவாக நேற்று கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில் வைத்து வழிபடப்பட்டது. பின், அலகுமலையிலுள்ள பள்ளி வளாகத்தில், மஹா யாகம் துவங்கியது. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி தலைமையில் யாகம் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில பொது செயலாளர்கள் முருகானந்தம், கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, சேவாபாரதி மாநில துணை தலைவர் ராமசாமி, பொங்கலுார் பிரம்மானந்தா தெய்வசிகாமணி சுவாமி, அலகுமலை வித்யாலயா பள்ளி தாளாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். யாக பூஜை மற்றும் வேல் வழிபாட்டில், திரளானோர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, வேல் வழிபாடு நடந்த வளாகத்தில், பரதம், கும்மி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மஹா யாகத்தை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.