பதிவு செய்த நாள்
29
டிச
2024
06:12
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.துளசிதாசர் எழுதிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் இதன் பொருளை வாசிக்கலாம். மாலையில் 1008 முறைக்கு குறையாமல் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோயிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம் நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இரவில் தூங்கும் முன் ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமானவர் கள் சாப்பிடாமல் இருக்கலாம். மற்றவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அனுமனை வணங்குவதன் பலன்: அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.
என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்: ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த
வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.