பதிவு செய்த நாள்
30
டிச
2024
10:12
மாமல்லபுரம்; மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதி பகுதியில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சாலை விபத்தில் இறந்த குரங்கு, இங்கு அடக்கம் செய்யப்பட்டு, பக்த ஆஞ்சநேயர் கோவில் ஏற்படுத்தப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அனுமன் ஜெயந்தி உற்சவம், இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த 26ம் தேதி, பந்தக்கால் அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக, சுவாமி சிறப்பு அபிஷேகம் கண்டு, இரவு ஊஞ்சல் சேவையாற்றி, மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, ஜெயந்தி உற்சவம் கண்டு, மாலை 4:30 மணிக்கு மேல் வீதியுலா செல்கிறார். இதேபோல், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் -– வண்டலுார் சாலை புதுப்பாக்கத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், இந்தாண்டு அனுமன் ஜெயந்தி வைபவம், இன்று நடைபெறுகிறது. மேலும், செங்காடு கிராமத்தில், சிறப்பு பெற்ற யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, இன்று நடைபெறுகிறது. இங்கு தினசரி நடைபெறும் தனுார் மாத வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நெல்லிக்குப்பம் அம்புஜ வள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதேபோல், வெண்பேடு கிராமத்தில் உள்ள 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு, பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது.