சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. கடந்த 26 -ல் மண்டல பூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று மாலை 4:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஸ்ரீ கோயில் நடைதிறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். இரவு 11.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 3:30 முதல் 11:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 14- ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக 11-ல் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் எருமேலியில் நடைபெறுகிறது. 12-ல் பந்தளத்தில் இருந்து திருபாகரனும் புறப்படும். மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்களின் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 13 மற்றும் 14 தேதிகளில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் 50 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர். ஸ்பாட் புக்கிங்கில் ஐந்தாயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.