பதிவு செய்த நாள்
31
டிச
2024
03:12
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டன. ஒராண்டிற்கு, 365 நாட்களை குறிக்கும் வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும், டிச.31ம் தேதி, திருப்படித் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று, திருப்படித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. படித் திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், இந்த மலைக்கோவிலுக்கு வந்து பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிப்பட்டனர். இன்று, நண்பகல், 11:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று, நள்ளிரவு 12:01 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, ஜன.,1ம் தேதி இரவு, 9:00 மணி வரை புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முன்னதாக, இரவு 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தங்கத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.