பதிவு செய்த நாள்
30
நவ
2012
10:11
உலகையே ஆட்டிப் படைக்கும் சனீஸ்வரர் பிரம்ம கத்தி தோஷம் நீங்க, அவர் அலையாய் அலைந்து இறுதியில், குச்சனூருக்கு வந்தபோது தான் அந்த தோஷம் நீங்கியது. அதனால் அனுக்கிரக மூர்த்தியாகவும், சுயம்புவாகவும் சனீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் வரலாற்று சிறப்பு பெற்ற ஸ்தலம் குச்சனூர். கோயில் நகரான இங்கு, இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கான வசதிகளில், பெரும்பாலானவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெரியாற்றிலிருந்து சுத்திகரிப்பும், குளோரினேசனும் செய்யப்படாத குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 1965 ல் அமைக்கப்பட்ட சாக்கடை பயன்பாட்டில் உள்ளதால், தெருக்களிலும், சனீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் ரோட்டிலும், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களானாலும் குப்பை அகற்றப்படுவதில்லை. சுகாதார சீர்கேட்டால் டெங்கு பரவ அதிக வாய்ப்புள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அடுத்தபடியாக குச்சனூருக்குத் தான், அதிகளவில், மத்திய, மாநில அமைச்சர்களும், சினிமா நட்சத்திரங்களும், இந்தியாவின் வி.வி.ஐ.பி.,க்களும் வருகை தருகின்றனர். தங்களை பிடித்த தோஷங்கள், பிரச்னைகள், நீங்குவதற்கும் பரிகாரம் செய்து, பதவிகள் கிடைப்பதற்கு மட்டும் சனீஸ்வரரை தரிசிக்க வருகின்றனர். கோயிலில் உள்ள வசதி குறைபாடுகள் பக்தர்களுக்கும் கோயிலுக்கும் தாங்கள் செய்துதர வேண்டியதைப்பற்றி கண்டுகொள்வதில்லை. நிதியமைச்சர் தொகுதிக்குட்பட்ட கோயில் நகரமான இங்கு, பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.கோயிலில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மக்களின் சிரமங்களும், இடர்பாடுகளும் தொடர்வது குச்சனூர் மக்களின் கிரகநிலை போலும்.