பதிவு செய்த நாள்
02
ஜன
2025
01:01
பாலக்காடு; குருவாயூர் கோவிலில் நாதஸ்வரம், தவில் சங்கீத உற்சவம் கோலாகலமாக நடந்தது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 2022 முதல் தேவஸ்தானம் சார்பில் நாதஸ்வர-ம், தவில் சங்கீத உற்சவம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, மூன்றாவது நாதஸ்வரம், -தவில் சங்கீத உற்சவம் நேற்று அதிகாலை, 5:30 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. முதலில் நாதஸ்வர-, தவில் கலைஞர்களின் மங்கள வாத்திய சமர்ப்பணம் நடந்தது. மூலவரின் சன்னதி முன் நடந்த இந்த நாதார்ச்சனையில் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். காலை, 11:00 மணிக்கு நடந்த நாதஸ்வர பஞ்சரத்ன கீர்த்தனை இசை ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்தது. மதியம், 12:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் சங்கீத உற்சவத்தை கவிஞரும் மலையாளத் திரைப்பட பாடல் ஆசிரியருமான கைதபிரம் தாமோதரன் நம்பூதிரி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், முத்தரசநல்லூர் ராமச்சந்திரன் நினைவு விருது பிரபல நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளைக்கு வழங்கப்பட்டது. தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமை வகித்தார். நாதஸ்வரக் கலைஞர்களான குருவாயூர் முரளி, மருத்தோர்வட்டம் பாபு, தவில் கலைஞர் ஓச்சிறை பாஸ்கரன், தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.