பதிவு செய்த நாள்
02
ஜன
2025
03:01
வடவள்ளி; வடவள்ளி, பிருந்தாவன் ஹில் வியூவில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு மனிதன், தன் வாழ்நாளில் மனதில் வருத்தமில்லாமல் இருப்பதே சாதனை என, ஆன்மிக சொற்பொழிவாளர் ரமணன் தெரிவித்தார்.
வடவள்ளி, லட்சுமி நகரில் உள்ள பிருந்தாவன் ஹில் வியூ சீனியர் சிட்டிசன் ஹோமில், புத்தாண்டு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஆன்மிக சொற்பொழிவாளர் ரமணன் கலந்து கொண்டார். இவ்விழாவில், சேஷாத்ரிநாதன் பரத்வாஜ் எழுதிய திருத்தொண்டர்களின் இறையனுபவம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை, சொற்பொழிவாளர் ரமணன் வெளியிட, பிருந்தாவன் ஹில் வியூ நலச்சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், பிருந்தாவன் ஹில் வியூ குடியிருப்புவாசிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சொற்பொழிவாளர் ரமணன் பேசுகையில்,"ஒரு மனிதனின் வாழ்வில், முக்கிய சாதனை என்பது, நீங்கள் பெற்ற விருதுகளோ, படித்து பெற்ற பட்டங்களோ, பணமோ இல்லை. நமது மனதில் எந்த வருத்தமும், இதயத்தில் எந்தவிதமான கீறல்களும் இல்லாததே உண்மையான சாதனை. நாமும் எதையும் துரத்தி செல்லக்கூடாது. நம்மையும் எதுவும் துரத்த நாம் அனுமதிக்க கூடாது. இதுதான் சாந்தி. உலகமே நம்மை கைவிட்டாலும், நாம் நம்மை கைவிடாமல் இருப்பது தான் ஞானம். எப்போதும் எது உச்சமாக இருக்கிறதோ அந்த சத்தியத்தின் பெயர்தான் யோகம். அந்த சத்தியம் எப்போதும் என்னுள்ளேயே இருக்கிறது என்ற தெளிவின் பெயர் தான் ஞானம். அந்த சத்தியம் தான் நம்மை காக்க வேண்டும். அதைத்தான் நான் எப்போதும் பணிந்து கொண்டிருக்கிறேன் என்ற பாவனை தான் பக்தி. ஒரு மனிதரையோ, பொருளையோ, சித்தாந்தத்தையோ ஆதாரமாக கொண்டு, அதன் மூலம்தான் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்றால் அது ஆபத்து. ஒரு மனிதன், பொருள், சித்தாந்தம் ஆகியவற்றிற்கு ஆயுள் உண்டு. எதற்கு ஆயுள் உள்ளதோ, அதற்கு பிணி உண்டு, தேய்மானம் உண்டு, மரணமும் உண்டு. அமைதி என்னுடைய இயல்பு, ஆனந்தம் அதன் வெளிப்பாடு என்ற நிலைப்பாட்டில் இருந்தால் எப்போதும், எந்த காரணமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்,"என்றார்.