அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநில போலீசார் கூறியதாவது: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப் பட்டதையடுத்து தாலிபான் தீவிரவாதிகளால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பொற்கோவில் மட்டுமல்லாது ஜாலியன் வாலாபாக், மற்றும் துர்கையானா கோவிலுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான நான்கு நாட்கள் இடைவெளியில் அமிர்தசரஸ் மற்றும் பெர்ரோஸ்பூருக்கு பாகிஸ்தானில் இருந்து சுமார் ஆயிரத்து 950 தொலைப்பேசி அழைப்புக்களை இடைமறித்து கேட்டபோது இது குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்த அழைப்புக்களில் பெரும்பாலானவை பஞ்சாப்பில் உள்ள உறவினர்கள், வியாபாரிகளுக்கே சென்றுள்ளன எனவும், அந்த குறிப்பிட்ட அழைப்புக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.