பதிவு செய்த நாள்
03
ஜன
2025
11:01
திருப்புத்துார்; பழநிக்கு பாதயாத்திரையாக பக்கத்து மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட பக்தர்கள் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி வழியாக செல்கின்றனர். முருகனை வேண்டி பழநி பாதயாத்திரை செல்வது சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமானது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த யாத்திரைக்காக முருக பக்தர்கள் கார்த்திகை 1 ல் விரதம் துவங்கி, தைப்பூசத்தன்று பழநி சென்றடைவது வழக்கம். பாரம்பரிய யாத்திரை செல்லும் நகரத்தார் தைப்பூசத்தை ஒட்டியே புறப்படுகின்றனர். பாரம்பரிய பாதையாக தேவகோட்டை,காரைக்குடி பகுதியிலிருந்து புறப்பட்டு குன்றக்குடி வந்து அங்கிருந்து வைரவன்பட்டி, கண்டவராயன்பட்டி, மருதிப்பட்டி, சிங்கம்புணரி, மணப்பச்சேரி, சமுத்திராப்பட்டி, நத்தம், உப்பார், இடைச்சிமடம், திண்டுக்கல், ரெட்டியாரபட்டி, செம்மடைப்பட்டி, குழந்தைவேலன் சன்னதி, சத்திரப்பட்டி, ஆயக்குடி, இடும்பன்குளம், பழநி என்று ரோட்டில் மட்டும் செல்லாமல் பாரம்பரியமான வயல், கண்மாய்கரை என்று கிராமங்களுக்கு குறுக்கிலும் நடந்தே செல்கின்றனர். தை 21 ல் புறப்பட்டு தை 29 ல் பழநி சென்றடைகின்றனர். 5 நாள் பூஜை, காவடி செலுத்திய பின்னர் மாசி 5ல் ஊர் திரும்புகின்றனர். இதைப் போன்றே நாட்டார் யாத்திரையும் நடைபெறும். தைப்பூசத்தன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் பழநியில் குவிவதால் சிரமத்திற்குள்ளாகும் பக்தர்கள் தற்போது முன்னதாகவே யாத்திரை செல்லத்துவங்கியுள்ளனர். தஞ்சாவூர், அறந்தாங்கி பகுதியினர் கடந்த சில நாட்களாக யாத்திரை துவங்கி குன்றக்குடி,பிள்ளையார்பட்டி வழியாக சென்றனர்.