பதிவு செய்த நாள்
03
ஜன
2025
01:01
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி 10ம் தேதி அன்று பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். வரும் 9ம் தேதி வரை முறையே காளிங்கநர்த்தனன், சக்ரவர்த்தித்திருமகன், ஏணிக்கண்ணன், பரமபதநாதன், பகாசூரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளிக்கண்ணன், நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.
வைகுண்ட ஏகாதசியான,10ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு உள்பிரஹார புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 5:30 மணி முதல் இரவு 10:30 மணிவரை கட்டண தரிசனம் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நடக்கிறது. இதையடுத்து, 11ம் தேதி துவங்கும் திருவாய்மொழித் திருநாள் எனும் இராப்பத்து உற்சவத்தில் வேணுகோபாலன், ரத்னாங்கி சேவை, திருவேங்கடமுடையான் கோலம், உற்சவர் முத்தங்கி சேவை, ராமமன்னார், கோவர்த்தனகிரி, சாற்றுமறை, இயற்பா சாற்றுமறை ஆகியவை நடக்கின்றன.
வரும் 12ம் தேதி முதல் 18ம் தேதி முடிய தினந்தோறும் மாலை 4.15 மணிக்கு சுவாமி பரமபதவாசலுக்கு எழுந்தருளி பரமபதவாசல் தரிசனம் நடைபெறும். 11ம் தேதி மற்றும் 19ம் தேதி அன்று காலை 9 மணிக்கும் பரமபதவாசல் தரிசனம் நடைபெறும். பரமபதவாசல் தரிசன கட்டணச்சீட்டு நபர் ஒருவருக்கு ரூ.500/- (நபர் ஒன்றுக்கு ஒரு சீட்டு வீதம் ஆதார் அட்டை நகல் கொடுத்து கட்டணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். வரும் 06 அன்று காலை 11 மணிக்கு கட்டணச் சீட்டு வழங்கப்படும். முதலில் வரும் சுமார் 500 நபர்கள் முன்னுரிமை அடிப்படையில் பரமதவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். 80 நபர்களுக்கு 20 நாட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பொது தரிசனம்; கோயில் கிழக்கு கோபுர வாசல் (முன்புறம்) வழியாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொது தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முன்கோபுர வாசல் வழியாக தேரடித் தெருவில் பொது தரிசன நுழைவு வாயில், தெற்கு மாட வீதியில் பொது தரிசன நுழைவு வாயில் இத்திருக்கோயில் இருபுறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு திருக்கோயில் மூலம் பந்தல் மற்றும் கியூ வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.