பதிவு செய்த நாள்
03
ஜன
2025
05:01
கூவத்துார்; கூவத்துார், அங்காள பரமேஸ்வரி கோவில் முன்புற திறந்தவெளி பகுதியை மேம்படுத்த வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கல்பாக்கம் அடுத்த கூவத்துாரில், நுாற்றாண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் மயான கொள்ளை உள்ளிட்ட உற்சவங்கள் நடக்கின்றன. அங்காள பரமேஸ்வரி, விநாயகர், பாலமுருகர், துர்க்கை, மதுரை வீரன், பாவாடைராயன், சப்த கன்னியர் ஆகிய சுவாமியர் வீற்றுள்ளனர். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளை, இக்கோவிலை நிர்வகிக்கிறது. தற்போது உபயதாரர் வாயிலாக, நுழைவாயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த டிச., 5ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இச்சூழலில், கோவில் முன்புற திறந்தவெளி பகுதி, குண்டும் குழியுமாக உள்ளது. மழையின் போது, சேறும் சகதியுமாக மாறுகிறது. மயான கொள்ளை உள்ளிட்ட உற்சவ நாட்களில், இப்பகுதியில் பக்தர்கள் திரண்டு நிற்பர். வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் கார், இருசக்கர வாகனங்களையும் இங்கு நிறுத்துகின்றனர். எனவே, கோவிலின் முன்பகுதியை சமன்செய்து, சிமென்ட் கல் தளமாக மேம்படுத்த வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.