பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத ஸ்வாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடக்கும். மேலும் இவ்வாண்டு ராகுபெயர்ச்சி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடப்பதால், இவ்விரு விழாவும் விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. டிசம்பர், 2ம் தேதி ராகுபெயர்ச்சி விழா நடக்கிறது. டிசம்பர், 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 9ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடக்கிறது. இவ்விழாக்களையொட்டி கடந்த, 23ம்தேதி கோவில் வாசல் கொடிமரம் முன்பாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பின் தேர் முகூர்த்தம் நடந்தது. அங்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. டிசம்பர், 2ம் தேதி நடைபெற உள்ள ராகுபெயர்ச்சி விழாவையொட்டி, கடந்த, 26ம் தேதி காலை லட்சார்ச்சனை தொடக்கவிழா ராகுபகவான் சன்னதியில் நடந்தது. முன்னதாக ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, புஷ்பலங்காரம் செய்யப்பட்டது. பின் ராகுபெயர்ச்சி பரிகார லட்சார்ச்சனை துவங்கியது. நேற்று மாலை முதல்கட்ட லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. வருகிற, 3ம் தேதி இரண்டாம் கட்ட பரிகார லட்சார்ச்சனை துவங்குகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி கமிஷனர் பரணிதரன் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.