பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
காஞ்சிபுரம்:இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், உள்ள கோவில் களில், அரசு செயல்படுத்தும் அன்னதான திட்டத்திற்கு, உணவு பரிமாற கோவில்களில்,போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அன்னதான திட்டம்: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாவட்டம் முழுவதும் 24 கோவில்களில், தமிழக அரசு இலவச அன்னதான திட்டம் செயல்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் கோவில்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு, 20 முதல் 50 பேர் வரையில், அன்னதானம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்த, கோவில்களுக்கு ஏற்றவாறு, ஒரு சமையலர் மற்றும் ஒரு உதவியாளரை நியமித்துள்ளனர். இவற்றில், பெரும்பாலான கோவில்களில் சமையலர் மட்டும் தான் உள்ளனர். உதவியாளர்கள் இல்லை.காஞ்சிபுரம், கச்சபேஸ்வர் கோவிலில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு, சமையலர் ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவரே சமையல் பணியை கவனித்து விட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, உணவு அளிக்கிறார். ஆட்கள் இல்லைஒரே நேரத்தில், 20க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பந்தியை பரிமாற முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனால், அன்னதானம் திட்டத்தில்கலந்துக்கொள்ளும் பொது மக்களே பரிமாறிக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. இதுகுறித்து, கோவில் அதிகாரிகள் கூறுகையில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருமானம் உள்ள கோவில்கள், மிகவும் குறைவாகவே உள்ளன. வருவாய் அதிகமாக உள்ள கோவில்களில் மட்டுமே, சமையலர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர்கள் இல்லாத கோவில்களில், சேவையாளர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என, தெரிவித்தனர். இதுகுறித்து, இந்து சமய அறநிலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " சமையலரை நியமிக்க மட்டும் தான் உத்தரவு உள்ளது. உதவியாளரை நியமிக்க அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என, தெரிவித்தார்.