பதிவு செய்த நாள்
07
ஜன
2025
10:01
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 சோழ நாட்டு திருப்பதிகளில் 14வது திருப்பதியாகவும் விளங்கும், வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உலகப்புகழ் பெற்ற கல்கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் மிகவும் சிறப்பாக நடக்கிறது. அதன்படி கடந்த 3ம்தேதி முக்கோடி தெப்பத்திருவிழா எனும் மார்கழிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவாக சுவாமி எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மாலை, கருடாழ்வார் சன்னதியில் இருந்து கல்கருட பகவானை 4 பக்தர்கள் துாக்கி வர, பின்னர் 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என்று படிப்படியாக மொத்தம் 128 பேர் கல் கருட பகவானை தோளில் சுமந்துக்கொண்டு வாகன மண்டபத்தில் எழுந்தருள கல் கருடசேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கருடாழ்வாரை சேவை சாதித்தனர். பிறகு சீனிவாசப்பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லி தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், தக்கார் முருகன் மற்றும் உபயதாரர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.