பதிவு செய்த நாள்
07
ஜன
2025
10:01
சிருங்கேரி ; சிருங்கேரியில் உள்ள தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாசார்யாள் அருளிய மூன்று பவித்ரமான ஸ்தோத்திரங்கள் சுமார் 50,000 பக்தர்கள் சேர்ந்து ஒரே குரலாக பாராயணம் செய்யப்படும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள சிருங்கேரியில் இந்த 2025 ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் செய்து முடித்து தயார் நிலையில் உள்ளது. ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் ஸன்யாஸ ஆசிரம ஸ்வீகாரத்தின் பொன்விழா கொண்டாட்டமாக ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் ஸுவர்ண பாரதீமஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக இந்த பாராயணம் நிகழ உள்ளது.
துங்கபத்திரை நதிக்கரையில், சிருங்கேரி க்ஷேத்திரத்தில் (இன்றைய கர்நாடகா மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்தில்) சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யாரால் பாரத்தின் நான்கு திசைகளில் நான்கு வேதங்களின் குறியீடாக நிறுவப்பட்ட ஆம்நாய பீடங்களுள் முதலாவதும் முக்கியமானதுமான தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தில் அன்றிலிருந்து இன்று வரை ஒரு அவிச்சின்னமாக அதாவது இடைவிடாத தொடர்சங்கிலி போன்ற மஹோன்னதமான ஆசார்யர்களைக் கொண்ட குரு பரம்பரை விளங்கி வருகிறது. பாரதத்தின் தெற்கு திசையில் ஏற்படுத்தப்பட்ட தக்ஷிணாம்நாய ஸ்ரீசாரதா பீடம் சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதிலும், அதை மென்மேலும் எங்கும் கொண்டு செல்வதிலும் முன்னோடியாக உள்ளது.
ஸ்ரீ சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியாக தற்போது அருட்கோலோச்சி வரும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள், சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டதிலிருந்து ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கும் ஆசிரம தர்மங்களை ஒருப்போதும் தவறாமல் அனுஷ்டிப்பது ,ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாளின் உபதேசங்களை சாமான்ய மக்களும் அறிந்துகொள்ளும் முறையில் போதிப்பது, சனாதன தர்மத்தை என்றும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் நிலைநிறுத்துவது மற்றும் பரப்புவது போன்ற செயல்களில் எப்போதும் அயர்வின்றி தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உலகிற்கு அருள்செய்து வருகிறார். தம்முடைய பீடாதிபத்தியத்தின் வெள்ளிவிழாவிற்கு பிறகு 2015 ஆம் ஆண்டில், ஸ்ரீ ஜகத்குரு அவர்கள், தம்மிடம் சாஸ்திரம் பயின்று வந்த ஸ்ரீ குப்பா வெங்கடேச்வர பிரஸாத சர்மா என்ற அனைத்து ஸத்குணங்கள் பொருந்திய ஒரு சிறந்த பிரஹ்மசாரிக்கு ஸந்நியாஸ ஆசிரமம் வழங்கியருளினார். அவருக்கு “விதுசேகர பாரதீ”, என்ற யோகபட்டத்தை அருளி தமது உத்தராதிகாரி சிஷ்யராக, பீடத்தின் 37வது ஆசார்யராக அறிவித்தார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி, (ஆச்வயுஜ கிருஷ்ண துவாதசி) அன்று ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஸன்னியாஸ ஆசிரமம் ஸ்வீகரித்து 50வது வருடத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அந்த முக்கியமான தினத்தில் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹாஸ்வாமிகள், ஒரு ஆண்டிற்கு அனேக தார்மிக மற்றும் கலாசாரத்திற்கு தொடர்பான பற்பல நிகழ்ச்சிகளைக் கொண்ட பெரியதொரு முறையில் நிகழ்த்துவதற்கு உத்தரவிட்டருளினார். மேலும் இந்த பொன்விழா நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமாக ஸுவர்ண பாரதீ மஹோத்ஸவம் என்று பெயரிட்டார். வைதிக நிகழ்ச்சிகள், தர்ம காரியங்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தொண்டு செயல்கள் போன்றவை இந்த கொண்டாட்டத்தின் அங்கமாக நடைபெறும் என்று அறிவித்தார்.
மஹோத்ஸவத்தின் தொடக்கத்தில் சிருங்கேரியில் மூன்று பெரிய யக்ஞங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன - சஹஸ்ர மோதக கணபதி ஹோமம், அதி ருத்ர மகாயாகம் மற்றும் சஹஸ்ர சண்டி மகாயாகம். இவை - அக்டோபர்/நவம்பர் 2023 இல் சிருங்கேரியில் உலக நலனுக்காக நடத்தப்பெற்றன. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த மாபெரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர். மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக சுவர்ண பாரதீ மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக சிருங்கேரியில் உள்ள நரசிம்ம வனத்தில் 2024 ஆகஸ்ட் 5 முதல் 11 வரை கிருஷ்ண யஜுர்வேத ஹவனம் நடத்தப்பட்டது.
சங்கரகிரி திறப்புவிழா: ஸ்ரீ ஆதி சங்கராசார்யருக்கு பொருத்தமான நன்றிக்கடனாக, ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் 32 அடி உயரமுள்ள அவருடைய திவ்விய மங்களமான திருவுருவச்சிலையை சிருங்கேரி அருகே சங்கரகிரி என்ற மலையில் நிறுவினார். 10ம் தேதி நவம்பர் 2023 (அச்வயுஜ கிருஷ்ண துவாதசி) அன்று பக்தர்கள் அந்த ஜகத்குரு மஹாஸ்வாமிகள் செலுத்தும் அந்த நன்றிக்கடனைக் காணும் பாக்கியம் பெற்றனர். அந்நாளில் ஜகத்குரு மஹாஸ்வாமிகள் இருவரும் சங்கரகிரிக்கு எழுந்தருளி திறப்புவிழாவை நிறைவேற்றினர். ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரரின் 600 டன் திருவுருவச்சிலையுடன், அவரது நான்கு முதன்மை சீடர்களான ஸ்ரீ சுரேச்வராசார்யர், ஸ்ரீ ஹஸ்தாமலகாசார்யர் , ஸ்ரீ பத்மபாதாசார்யர், மற்றும் ஸ்ரீ தோடகாசார்யர் ஆகியோரின் திருவுருவச்சிலைகளும் மலையில் நிறுவப்பட்டுள்ளன. ஸ்ரீ சாரதா பீடத்தின் 12வது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகளின் மூர்த்தியும் இந்த பவித்திரமான மலை வளாகத்தில் நிறுவப்பட்டு இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்.
பாகவத சப்தாஹம்: ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதிலும் இருந்து 108 பண்டிதர்கள் சிருங்கேரியில் பாகவத மஹாபுராணத்தின் கூட்டு பாராயணத்தை ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை உலக நன்மைக்காக செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமத் பாகவத பாராயணம், விஷ்ணுசஹஸ்ரநாம பாராயணம், சாங்கர ஸ்தோத்ர படனம், நாமசங்கீர்த்தனம், வாசுதேவ த்வாதஷாக்ஷரி மஹாமந்திர அக்ஷர-லட்ச ஜப ஹோமம் மற்றும் உபன்யாசங்கள் தினசரி இடம்பெற்றன.
பிற தர்ம கார்யங்கள்: ஸுவர்ணபாரதீ விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வேத சபாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் வேத பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேதபாரயணம் செய்து ஜகத்குரு மஹாஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்றனர். "அனைவருக்கும் கீதை”, " புராணங்களில் ஞானம்", "வேதாந்த பிரவேசம்”, "வேதாந்த சிரவணம்” போன்ற தலைப்புகளில் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் சொற்பொழிவுகள் அறிஞர்களால் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நிகழ்த்தப்பட்டன. ஸ்ரீ சாரதா பீடம் மற்றும் அதனுடைய பல்வேறு நிறுவனங்களின் பிரசுரங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் சாரதா க்ராந்தாலயா என்ற ஒரு ஆன்லைன் போர்டல் துவங்கப்பட்டு அதன் மூலமாக பக்தர்கள் தேவையான புத்தகங்களை பெற வசதி செய்யபட்டது. "சங்கர விஜயம்”என்ற தலைப்பில் ஒரு வார விழாவை சென்னை வித்யாதீர்த்தா அறக்கட்டளை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில். ஏற்பாடு செய்தது. ஆதி சங்கர பகவத்பாதாளின் வாழ்க்கை மற்றும் அவரது உபதேசங்களை மையமாகக் கொண்ட இந்த விழாவில் சிறந்த பேச்சாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் பற்றிய "தர்மத்தின் உருவகம்" என்ற புகைப்பட கண்காட்சி அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு சிறப்பு அம்சமாக இருந்தது.
சனாதன தர்மத்தில் பக்தியின் பங்கை சிறப்பிக்கும் வகையில், ஸுவர்ண பாரதீ மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து வயதினரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைகள் முகாம்கள் இலவசமாக நடத்தப்பட்டன. ஸ்ரீ சாரதா பீடத்துடன் இணைந்து செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் சனாதனதர்மத்தின் லட்சியங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப்போட்டி முதலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ மகாஸ்வாமிகள் அவர்கள் தமது விஜய யாத்திரையில் பல கல்விக்கூடங்களுக்கு விஜயம் செயது ஆசீர்வதித்து மாணவர்களுக்கு சிறந்த உபதேசங்களை அருளினார்.
நிறைவு விழா: வரும் ஏப்ரல் 3ம் தேதி, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 75 வது வர்தந்தி நிகழ்ச்சியுடன் பொன்விழா கொண்டாட்டத்தின் பிரமாண்டமான நிகழ்வுகள் நிறைவுபெற உள்ளன.