பதிவு செய்த நாள்
08
ஜன
2025
10:01
சபரிமலை; மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. இந்த சீசனில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர்.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 30 மாலை 4:00 மணிக்கு திறந்தது. அன்றுமுதல் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. 30 முதல் ஜன., ஆறாம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். ஆறாம் தேதி மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் தரிசனம் நடத்தினர். 5-ம் தேதி இது 90 ஆயிரத்து 678 ஆக இருந்தது. டிச.,30 நடை திறந்த நாள் முதல் பக்தர்களின் நீண்ட கியூ எப்போதும் மர கூட்டம் வரை காணப்படுகிறது. இதனால் 7 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். இந்த சீசனில் எருமேலி , புல்மேடு பாதைகளில் வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. புல் மேடு பாதையில் சத்திரத்திலிருந்து காலை 6:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், எரிமேலியிலிருந்து பெருவழிப் பாதையில் முக்குழியில் இருந்து மாலை 4:00 மணி வரையிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் கூட்டம் காரணமாக சன்னிதான திருமுற்றம், வாவர்நடை முன்புறம் உள்ள மைதானம், மாளிகைப்புறம் கோயில் பக்கம் உள்ள மைதானங்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் நிறைந்துள்ளது. அப்பம் அரவணை கவுண்டர்களிலும் 24மணி நேரமும் நீண்ட கியூ காணப்படுகிறது. பம்பையில் ஸ்பாட் புக்கிங்குக்காக ஏழு கவுண்டர்கள் செயல்படுகிறது. இங்கு பக்தர்களின் நீண்ட கியூ திருவேணி சங்கமம் வரை நீண்டு காணப்படுகிறது. இங்கு பாஸ் வழங்குவது தாமதமாவதாகவும், இதனால் சிரமப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் புல் மேடு பாதையில் நடுவழியில் சிக்கிய தமிழக பக்தர்கள் நான்கு பேரை போலீஸ் மற்றும் தேவசம்போர்டு ஸ்டிரெச்சர் சர்வீஸ் ஊழியர்கள் மீட்டு வந்தனர். சென்னையை சேர்ந்த லீலாவதி, ஆண்டனி, ஒருபெரியசாமி மதுரையைச் சேர்ந்த லிங்கம் ஆகிய நான்கு பேர் உடல்நல குறைவு காரணமாக உரக்குழியில் இருந்து மூன்று கி. மீ. தூரத்தில் தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். இது குறித்து வனத்துறை அளித்த தகவலின் பேரில் நான்கு பேரும் மீட்கப்பட்டு சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.