திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககவசம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானை யுடன் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து பொது வழி மற்றும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழி போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலுக்கு, இரண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.