பதிவு செய்த நாள்
12
ஜன
2025
07:01
சிதம்பரம்; உலக புகழ் பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. பல்லாயிணக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘வா வா நடராஜா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகல் மற்றும் இரவில் , சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான, தேர் திருவிழா நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி, சித்சபையில் அமர்ந்துள்ள, மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி, உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் காலை 7.00 க்கு எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8.30 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘வா வா நடராஜா’ என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக சென்று மாலை கீழ வீதி தேர்நிலையை அடைந்தன. வீதிகளில் பக்தர்கள் மண்டப்படி செய்து சுவாமியை வழிபட்டனர்.
தேருக்கு முன்பாக, நகராட்சி சார்பில் வீதி முழுவதும் லாரிகள் மூலம் தண்ணீர் விட்டு கழுவி சென்றனர். அதனை தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கோலமிட்டனர். இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனம், தெய்வத் தமிழ்ப்பேரவை சேர்ந்த சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் செய்தபடியே சென்றனர். பல்வேறு ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சிவன், பார்வதி வேடமணிந்து சிவவாத்தியங்கள் முழங்க, சிவநடனமாடி சென்றனர்.
மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும், மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கம். அதனையொட்டி, மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தினர் சார்பில், மூர்த்திகபே மோகன் தலைமையில், ஆண்கள் மற்றும் பெண்கள் 50 க்கும் மேற்பட்டோர், நடராஜள் மற்றும் சிவகாமி அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தினர். தேர் நிலைக்கு சென்ற பின், நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று (13 ம் தேதி) நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா சென்று வந்த பின், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவும், 15 ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். எஸ்.பி., ஜெயக்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் தலைமையில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தலைமையில், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.