திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2025 07:01
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜபெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் ஒன்று தான் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா தரிசன நாள். சிவனடியார்களின் சிறப்புமிக்க விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு நடராஜர் சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாஆவரன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை, திருவம்பாவை பாடப்பட்டு சுவாமி வீதிஉலா நடக்கிறது. தொடர்ந்து பகல் 11:40 மணிக்கு திருவூடல் வைபவம், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் படுகிறது.